
இந்த உலகம் விசித்திரமானது. இதில் உள்ள மக்கள் ஆச்சர்யமான இயல்பு உடையவர்கள். தாங்கள் வளர வேண்டும் என்ற தீவிரமான எண்ணம் உடையவர்களால் தான் உலகம் முன்னேறுகிறது. புதிய புதிய மாற்றங்களை உலகம் பெறுகிறது. ஆனால் இந்த நேர்மறையான எண்ணத்தோடு உலகம் நிறைவு பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். தான் வாழ வேண்டும். வளர வேண்டும் என்பதோடு நில்லாமல் பிறர் அழிய வேண்டும் என்கிற குரூரமான எண்ணமும் எதிர்மறையான மனோபாவமும் இங்கிருப்பதுதான் உலகத்தின் சகல சிக்கல்களுக்கும் காரணம். பல குடும்பங்கள் முன்னேறாமல் போனதற்கு இந்தக் குணம்தான் காரணம். "நான் நன்றாக இருக்க வேண்டும்" என்று மணிக்கணக்காகக் கடவுளிடம் வரம் கேட்கும் சிலர் "நீ விளங்கமாட்டே.. நல்ல இருக்க மாட்டே.." என்று நெருங்கிய உறவுகளைக்கூடக் கோபத்தில் சாபம் வழங்கி ஏசுகிறார்கள். எல்லோரும் வளர்ந்தால் உலகம் வளரும். ஒருவர் வளர்ந்து மற்றவர் கீழே போனால் அது முழு வளர்ச்சியாகுமா? அடுத்து என்ன நடக்கும்? கீழே போனவர் சும்மா இருப்பாரா? அவர் நாலு கோவிலுக்குப் போய் வேண்டுவார்.. என்ன வேண்டுவார்? "என் எதிரி இன்று நல்லா இருக்கிறானே! அவன் வாழலாமா! அவன் வளரலாமா! கடவுளே உனக்கு கண் இல்லையா? அந்தப் பயல் தெருவில் நிற்க வேண்டமா! அவன் கஷ்டப்படுகிற காட்சியை என் கண்ணால் நான் பார்க்க வேண்டாமா?" என்று வேண்டுவார்.
அவரது சாபம் இவரை வீழ்த்தும். இவரது சாபம் அவரை வீழ்த்தும். மொத்தத்தில் இருவரும் ஆரம்பித்த இடத்திலையே இருப்பார்கள். ஒருவரை ஒருவர் வளர விடாமல் செய்வதால் இருவருமே வளர முடியாது. ஒருவரை ஒருவர் ஓடவிடாமல் தடுப்பதால் இருவருமே ஓட முடியாது. இருவருமே புறப்பட்ட இடத்தில் இருக்க வேண்டியதுதான்.! இந்த உண்மையை ஏன் பலர் புரிந்து கொள்ளவில்லை.!
"நான் நன்றாக இருக்க வேண்டும்" என்று மட்டுமே வேண்டுவது சுயநலம் என்றாலும் அதில் பெரிய குற்றம் இல்லை. ஆனால் உத்தம மனம் உடையவர்கள் "ஸர்வ லோகோ சுகினோ பவந்து" என்றுதான் வேண்டுவார்கள். "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே" என்று வேண்டுகிற தாயுமானவர் தமிழே நம் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.
பலவிதமான நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், பண்பாட்டு வாழ்வியல் முறைகள் உடையதே உலகம். உலகில் வாழ்பவர் ஒருவரை ஒருவர் வெறுக்காமல், பகைக்காமல், பிறரையும் பிறரது நம்பிக்கைகளையும், உணர்வுகளையும் பழிக்காமல் புரிந்து கொள்ள கொஞ்சம் அக்கறையும் முயற்சியும் வேண்டும்.
மானிட பண்பாளர்களுக்குரிய தகுதியை நம்மில் வளர்த்துக் கொள்வோம், எமது கண்ணில் பிறருக்காக அழுவோம். பிரச்சனைகளாகவல்ல, தீர்வின் அங்கமாக நாம் இருப்போம். பிறக்கவிருக்கும் புதிய ஆண்டோடு சேர்த்து நம்மையும் புதிதாக பிறப்பித்துக்கொள்வோம். மாற்றம் ஒன்றே மானிட தத்துவம். மாற்றம் என்ற சொல்லைத் தவிர உலகில் அனைத்தும் மாறிவிட வேண்டும். எமது பண்புநலன் உட்பட. பண்பாளர்களுக்குரிய குணநலனைக் கொண்டு நம்மை பரிசோதித்து சீர்படுத்திக் கொள்வோம்.
01.பண்பாளர்கள் தெளிவாகவும், தர்க்கரீதியாகவும் சிந்திக்கிறார்கள். தைரியத்துடனும் கண்ணியத்துடனும் வாழ்கிறார்கள். விருப்பத்துடனும் பெருந்தன்மையுடனும் கொடுக்கிறார்கள். அன்புடனும் பெரிய மனதுடனும் மன்னிக்கிறார்கள்.
02.தனிச்சிறப்புரிமைகளைவிட கடமைகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு; பாதுகாப்பைவிட சுதந்திரம் மதிப்பு மிக்கது என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
03.கல்விக்கு கரையேதும் இல்லை: வாழ்க்கை என்பது முடிவே இல்லாத வளர்ச்சி இயக்கம் என்பதை அறிந்திருக்கிறார்கள்.
04.அழகின் சாரம் எளிமைதான் என்பதையும், நேர்மை தான் பண்புநலனின் அஸ்திவாரம் என்பதையும் புரிந்து வைத்திருக்கறார்கள்.
05. அளவற்ற செல்வத்தைவிட மகத்தான கருத்துக்கள்தான் நிரந்தரமானவை: அலங்காரச் சொற்களை விட நிதர்சனமாக எடுத்துக்காட்டுகள் கற்றுத்தருவது அதிகம் என்பதை புரிந்து கொள்கிறார்கள்.
06. கற்றுக் கொள்ளுதல் என்னும் மெழுகுவர்த்தியில் ஆர்வம் என்பது திரியைப் போன்றது, வியப்பு என்பது சாகசங்கள் மற்றும் சாதனைகளை ஒளியேற்றுகிற நெருப்புப்பொறி என்பதை அறிந்திருக்கிறார்கள்.
07. தமது உள்ளங்களில் நன்றியுணர்வை நிரப்பி வைத்திருக்கறார்கள்: தம்மைப் படைத்தவனுக்கும் சக மனிதர்களுக்கும் தமது நன்றியை வெளிப்படுத்துவதில் புதிய வழிகளைக் கற்று கொண்டிருக்கிறார்கள்.
08. புதிய சவால்களை, வெவ்வேறு பண்பாடுகளை, பழக்கமில்லாத வழக்கங்களை, எதிர்மறையான கருத்துக்களை வரவேற்கிறார்கள், மதிக்கிறார்கள், மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார்கள்.
09.அறிவுத்தாகம், உண்மையின் தேடல், ஞானத்தை அடைதல் இவற்றை எப்போதும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
10. தமது எல்லைகள் என்ன என்பதை அறிவார்கள், ஆயினும் சாத்தியக்கூறுகளில் கவனம் செலுத்துகிறார்கள். தமது தனிச்சிறப்பை அறிந்திருந்தாலும் மனித குலத்துடன் ஒன்றிவாழ்வதை மதிக்கிறார்கள்.
இவை எம்மை பரிசோதிப்பதற்கான அளவு கோல். முதலில் மாற்றத்தை நம்மில் காண்போம். மானிடம் சீர்பட இலட்சிய வடம் இழுப்போம், அனைவரின் மனதிலும் இடம் பிடிப்போம், புதிய பாதையில் தடம் பதிப்போம். உடலைப் பலப்படுத்தி, மனதை செப்பமிட்டு குழந்தை மனதுடனும் நிறைந்த பண்புடனும் சிகரம் நோக்கி சிங்க நடை போடுவோம். உலகினில் எல்லோரும் உறவென்று சொல்வோம்; அன்பென்னும் இராஜாங்கம் அமைந்திடச் செய்வோம்.
போன காலங்கள் போகட்டும்: இனி புதிய வரலாறு படைப்போம்...!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!
மகிழ்வுடன்: சுகிதரன்